Wednesday, January 25, 2012

கல்வி பற்றி திருவள்ளுவர் குறள்கள்


1.கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

2.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

3.கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

4.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

5.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

6.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

7.யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

8.ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

9.தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

10.கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம்
ஓர்நாள் கள்வனால் கவரப்படலாம்

மங்கை தான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டு
நீங்கி போகக் கூடும்

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட
பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தனில்
பேயென இழுத்துப் போகுமாம்

வெள்ளத்தால் அழியாத
நெருப்பால் வேகாத
திருடர்களால் களவாட முடியாத
மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்விச்செல்வம்
எண்ணுடன் எழுத்தும் வாழ்வின் கண்களாய்
வண்ணம் கூட்டும் இன்னலைத் தீர்க்கும்
கல்விச்செல்வம்..!

கல்வி

“வெள்ளத்தால் அழியாது வெந்தழலால்
         வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
         நிறைவன்றிக் குறைவுறாது
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கோ 
        மிக எளிது கல்வியென்னும்
உள்ளத்தே பொருளிருக்கப் புறம்பாகப்
        பொருள் தேடி உழல்கின்றார்!”